பணியில் சேர்ந்து 25-வது ஆண்டு விழா: ஒரே மாதிரி உடையணிந்து நடனமாடி பெண் போலீசார் கொண்டாட்டம்


பணியில் சேர்ந்து 25-வது ஆண்டு விழா: ஒரே மாதிரி உடையணிந்து நடனமாடி பெண் போலீசார் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2021 4:27 AM IST (Updated: 15 Dec 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

பணியில் சேர்ந்த 25 ஆண்டை ஒரே மாதிரி உடையணிந்து பெண் போலீசார் நடனமாடி கொண்டாடினர்.

கோவை,

தமிழக காவல்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்தனர். அப்போது பணியில் சேர்ந்த பெண் போலீசார் கோவை மாவட்டம் உள்பட பல பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் நட்பை பேணும் வகையில் “சங்கமம் கோவை நண்பர்கள்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் தொடங்கினர். அதில் அவர்கள் அடிக்கடி கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பணியில் 25 ஆண்டுகள்

இந்த நிலையில் அவர்கள் பணிக்கு சேர்ந்து 24 ஆண்டு நிறைவடைந்து 25-வது ஆண்டு தொடங்கியது. அதை அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் கூடி உற்சாகமாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி 78 பெண் போலீசார், கோவையை அடுத்த ஆனைக்கட்டி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒன்று கூடினர். அப்போது பெண் போலீசார் அனைவரும் ஒரே மாதிரியாக சேலை அணிந்து இருந்தனர். அவர்கள் தங்களின் பணி, குடும்பம், உடல் நிலை குறித்த நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.

நடனமாடினர்

இதையடுத்து பெண் போலீசார் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். பின்னர் சினிமா பாட்டுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி, தாங்கள் பணியில் சேர்ந்த 25-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.அதைத்தொடர்ந்து பெண் போலீசார் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பணியில் சேர்ந்த வெள்ளிவிழா ஆண்டில் 78 பெண் போலீசாரும் விரைவில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story