தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு இறக்குமதி செய்த பொட்டாஷ் உரம் அமைச்சர் தகவல்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு இறக்குமதி செய்த பொட்டாஷ் உரம் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2021 3:50 AM IST (Updated: 16 Dec 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4356 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

டிசம்பர் மாதம் முழுவதற்குமான தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பொட்டாஷ் உரத்தேவை 14 ஆயிரத்து 900 டன்னாகும். தற்போது, பொட்டாஷ் உரம் 4945 டன் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

இறக்குமதி

ஐ.பி.எல். நிறுவன பொட்டாஷ் உரம், 36 ஆயிரத்து 500 டன் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 8-ந் தேதியன்று பெறப்பட்டுள்ளது. தற்போது தேவைப்படும் 14 ஆயிரத்து 900 டன் ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் சிப்பமிடப்பட்டு, ரெயில் மற்றும் லாரி மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகின்றது.

இது வரை 1,795 டன் ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது. மொசைக் நிறுவனத்தின் டிசம்பர் ஒதுக்கீடான 3000 டன் பொட்டாஷ் உரத்தில், 1,275 டன் உரம் காக்கி நாடா துறைமுகத்திலிருந்து திருச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரெயில் மூலம் நகர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார இறுதிக்குள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட ஐ.பி.எல். பொட்டாஷ் உரம் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story