முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்துவதா? ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்


முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்துவதா? ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 16 Dec 2021 4:30 AM IST (Updated: 16 Dec 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், தி.மு.க. அரசின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

சென்னை,

தி.மு.க. அரசு அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கிற பெயரில் மிகப்பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலே வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து மக்கள் நலன் சார்ந்த அரசாக அ.தி.மு.க. அரசு தன்னுடைய நல்லாட்சியை முடித்திருக்கிறது.

அஞ்சுகிறது

ஆனால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய தி.மு.க. அரசு, நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிற அ.தி.மு.க. போர்படை தளபதிகளை பார்த்து அஞ்சுவதன் வெளிப்பாடுதான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை.

பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம். தீவிரம் காட்டினால் வழக்கு. தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து கொள்கை பிடிப்போடு இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று புறவாசல் வழியாகவே பயணம் செய்த தி.மு.க. இந்த நிகழ்வையும் புறவாசல் வழியாக கையாண்டு கொண்டு இருக்கிறது.

கைவிட மாட்டோம்

50 ஆண்டுகால அ.தி.மு.க. வரலாற்றில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சந்திக்காத சோதனைகள் இல்லை, சந்திக்காத துரோகங்களும் இல்லை, சந்திக்காத வழக்குகளும் இல்லை. அந்த வழியில் வந்த நாங்களும், தொண்டர்களும் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டோம். கருணாநிதி தொடராத வழக்குகளா? ஜெயலலிதா வெற்றி பெறாத வழக்குகளா?. அந்த வழியில் இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றி வாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக மீண்டு வருவோம்.

அதற்கு உண்டான மனோபலத்தை எங்களுடைய இரு பெரும் தலைவர்களும், தொண்டர்களும் தருவார்கள். இந்த இயக்கமும், நாங்களும் யாரையும் எந்த நேரத்திலும் கைவிட மாட்டோம். சோதனையில் தோளோடு தோள் நிற்போம்.

கண்டனம்

தி.மு.க.வின் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல் நேர்மறை அரசியலை முன்னெடுத்து தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story