2-வது கட்ட பணிகள் திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகின்றன: விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டம்


2-வது கட்ட பணிகள் திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருகின்றன: விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2021 7:08 PM GMT (Updated: 16 Dec 2021 7:08 PM GMT)

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் கூறினார்.

சென்னை,

சென்னை மாநகரில் சாலை போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதுடன், விரைவாகவும், பாதுகாப்பாகவும், குளிர்சாதன வசதி கொண்ட ரெயிலில் பயணிகள் பயணிப்பதற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. பரங்கிமலை-சென்டிரல், விம்கோநகர்-விமானநிலையம் ஆகிய 2 வழிப்பாதைகளில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

பயணிகளிடம் மெட்ரோ ரெயிலுக்கு போதிய வரவேற்பு இருப்பதால் சென்னை மாநகர் முழுவதும் 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரம் கோடியில் 118.9 கிலோமீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பாதையில் வருகிற 2026-ம் ஆண்டு ரெயிலை ஓட்டுவதற்காக பணிகள் நடந்து வருகிறது.

விமானநிலையம்-கிளாம்பாக்கம்

முதல் கட்டத்தில் வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் பாதையில் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2-வது கட்டமாக, மெட்ரோ ரெயில் வழிப்பாதையை விரிவுப்படுத்த திட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடியில் இந்த பணிகளை தொடங்க இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர்மட்ட பாதையில் இந்த மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம்-கிளாம்பாக்கம் வரை 15.3 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்கு மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை 1.2 கிலோமீட்டர் இடைவெளியில், 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

திட்டமிட்டப்படி பணிகள்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை அதற்கான குழுவினர் தயாரித்து வருகின்றனர். தற்போது தேவையான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு முடிவு எடுத்து அறிவிக்கும். 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்ட 2026-ம் ஆண்டு ரெயில்களை ஓட்ட வேண்டும் என்பதற்காக திட்டப்பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது.

முதல் கட்ட மெட்ரோ ரெயில் பாதையை வெற்றிகரமாக முடித்து ரெயில்களை இயக்கி வருவதால், அதில் கிடைத்த அனுபவங்கள் மூலம் 2-ம் கட்டப்பணிகளை திறமையாகவும், செலவு குறைவாகவும், விரைவாகவும் பணிகளை தரமாக செய்து வருகிறோம். குறிப்பாக முதல் திட்டத்தில் கட்டப்பட்ட ரெயில் நிலையங்கள் பெரிய அளவில் இல்லாமல், 2-வது கட்டத்தில் தேவையான அளவில் ரெயில் நிலையங்கள் சிறிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் திட்டச் செலவும் குறைந்து உள்ளது.

மாநகரில் சதுக்கங்கள்

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பாதைகள் மற்றும் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பல்வேறு பிரிவுகளாக பிரித்து அவ்வப்போது கோரப்பட்டு நிறுவனங்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களிடமும் திட்டமிட்டகாலத்தில் பணிகளை முடிக்க ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் மற்றும் கிண்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிப்பவர்கள் நலன் கருதி சிறுவர்களுக்கான பூங்காவுடன் கூடிய நகர்ப்புற சதுக்கம் கத்திப்பாராவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கடைகளுக்கான வாடகை வசூல் உள்ளிட்ட இதர பணிகளை முறையாக பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பூங்காவை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோன்று மாநகரில் வேறு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் இதேபோன்று சதுக்கங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story