தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 16 Dec 2021 10:52 PM GMT (Updated: 16 Dec 2021 10:52 PM GMT)

தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை,

கூட்டுறவுத்துறையின் 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலை கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூக பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

வரவேற்பு

இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலை குறைப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன. இதனால், கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தனியார் மருந்தகங்களுக்கு நிகராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் சிறந்த பொலிவுடன் விளங்கிட, அவற்றில் கணினி மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுனர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மு.அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மோட்டார் வாகன அலுவலகம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வழியாக, உள்துறை (போக்குவரத்து) சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுனர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

அதன்படி, சென்னை-4 (மயிலாப்பூர், ராயப்பேட்டை, கொளத்தூர், கொடுங்கையூர்), திருவள்ளுர்- 2 (நாராம்பேடு, ஆர்.கே.பேட்டை), செங்கல்பட்டு- 2 (செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில்), காஞ்சீபுரம்- 2 (முத்தியால்பேட்டை, அமராவதிப்பட்டினம்) ஆகிய இடங்களில் இந்த மருந்தக ங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Next Story