ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்று யார் சொன்னது..? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை தியாகராய நகரில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான். தமிழ்த்தாய் வாழ்த்து காலம் காலமாக பாடப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் உரிய மரியாதையை மக்கள் அளித்து வரும் நிலையில், இதற்கு ஒரு புது அரசாணை வெளியிட்டு வழிமுறைகள் வகுப்பது என்பது தேவை இல்லாதது.
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. திமுக அளித்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் மொட்டை மட்டும் தான் இலவசமாக போடப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என யார் சொன்னது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் தலைமறைவாக இல்லை என்றும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story