சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்தும் சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
பொதுச்செயலாளர் பெயரில் கல்வெட்டு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அக்கட்சியை வழி நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அ.தி.மு.க. கொடியையும் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி அன்று சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா கல்வெட்டை திறந்து வைத்தார்.
கமிஷனரிடம் மனு
சட்டவிரோதமாக அ.தி. மு.க. பதவி பெயரை பயன்படுத்துவதாக சசிகலா மீது அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி அன்று மாம்பலம் போலீஸ்நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால் அந்த புகார் மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஜெயக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நேற்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ‘இரட்டை இலை’ சின்னம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வுக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சசிகலா டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடியானது.
மாம்பலம் இன்ஸ்பெக்டருக்கு
சசிகலாவுக்கு, எல்லா பக்கமும் தோல்வியே வந்ததால், குழப்பத்தை விளைவிக்கும் வகையில் தன்னைத்தானே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என பிரகடனப்படுத்திக்கொண்டு வருகிறார். அ.தி. மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கடந்த அக்டோபர் 17-ந் தேதி எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அங்கு நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். எனவே சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 20-ந்தேதி அன்று மாம்பலம் போலீஸ்நிலையத்தில் நான் அளித்த புகார் மனு மீது இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த புகார் அடிப்படையில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தாங்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story