பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி மாணவரிடம் போலீஸ் விசாரணை


பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி மாணவரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Dec 2021 12:42 AM IST (Updated: 20 Dec 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாங்காட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் உருக்கமாக எழுதிய 3 கடிதங்களை மாங்காடு போலீசார் கைப்பற்றினர்.

அதில் அவர், “எனக்கு வாழ பிடிக்கல. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். வெளியில் சொன்னா. என்னைதான் தப்பா பேசுவாங்க. என்னை நீ பொண்ணுனு கூட பார்க்கல. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக்கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார். இதற்கு மேல் முடியாது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியல. பள்ளி பாதுகாப்பானது இல்லை. கல்லறையும், தாயின் கருவறையும்தான் பாதுகாப்பானது. ஆசிரியர், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம்” என்பது உள்பட பல உருக்கமான தகவல்களை எழுதி இருந்தார்.

பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மாங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மாணவியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் கடைசியாக யாரிடமெல்லாம் மாணவி பேசினார். அவர் அனுப்பிய குறுந்தகவல்கள் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவரிடம் விசாரணை

மாணவி 9-ம் வகுப்பு வரை படித்து வந்த தனியார் பள்ளி மற்றும் தற்போது படித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரிடமும், இதுதவிர மாங்காட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவி உருக்கமாக 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தாலும் தனது தற்கொலைக்கு காரணமானவரின் பெயரை குறிப்பிடாமல் இருப்பதால் அவரை தற்கொலைக்கு தூண்டிய நபர் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story