கணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி


கணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி
x
தினத்தந்தி 20 Dec 2021 1:37 AM IST (Updated: 20 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் கணவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த உறவினர்களை தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவருடைய மனைவி தனலட்சுமி (38). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

அப்போது தனது கையில் கணவர் கத்தியால் வெட்டி விட்டதாக கூறி தனலட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தனலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நேற்று காலை அரும்பாக்கம் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமியிடம் விசாரித்தனர். பின்னர் இதுபற்றி ஆனந்தகுமாரிடம் விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆனந்தகுமார் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டியதால், போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என முதலில் போலீசார் கருதினர்.

தூக்கில் தொங்கிய அவரது உடலை போலீசார் கீழே இறக்கி பார்த்தபோது, ஆனந்தகுமாரின் உடல் மற்றும் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அதே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை நாடகம்

ஆனந்தகுமாரின் தலையில் பலத்த காயம் இருந்ததால் இதுபற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருடைய மனைவி தனலட்சுமியிடம் அரும்பாக்கம் போலீசார் துருவி, துருவி விசாரணை செய்தனர். போலீசாரிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் தனலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அடித்துக்கொலை

எனது கணவர் ஆனந்தகுமார், எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக வழக்கம்போல் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது என்னை கணவர் சரமாரியாக தாக்கினார். மேலும் கத்தியால் எனது கையிலும் வெட்டினார். இதில் ரத்தம் கொட்டியதால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் எனது கணவர் ஆனந்தகுமாரின் தலையில் ஆத்திரம் அடங்கும் வரை சரமாரியாக தாக்கினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால் பயந்துபோன நான், எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். உடனடியாக அவர்கள் எனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரிந்தது.

கைது

பின்னர் குடும்பத் தகராறில் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் போலீசார் உள்பட அனைவரையும் நம்ப வைக்க ஆனந்தகுமார் உடலை தூக்கில் தொங்க விட்டோம். பின்னர் தகராறில் எனது கணவர் கத்தியால் கையை வெட்டிவிட்டதாக நான் கூச்சலிட்டேன். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டனர்.

அதன்பிறகு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எனது உறவினர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய தனலட்சுமியை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தனலட்சுமியின் உறவினர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story