ராணிப்பேட்டை: யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்..? குழந்தை உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். அதே பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வரும் இவருக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கர்ப்பமுற்ற அவரது மனைவிக்கு கடந்த 13-ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் லோகநாதன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்தபோது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து அவரது மனைவி மயங்கிய நிலையில், அவரை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு அவரது மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story