ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் அ.தி.மு.க.வை குறைகூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் அ.தி.மு.க.வை குறைகூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

‘ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் அ.தி.மு.க.வை குறைகூறுவது தவறு. இதனை மக்கள் ஏற்கமாட்டர்கள்’, என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். இந்தநிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தி.மு.க. அரசுதான் நிறைய செய்தது போலவும், கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரழித்து சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்ததாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை கூட ஒழுங்காக தர முடியவில்லை.

அ.தி.மு.க. மீது பழிபோடுவதா?

கொரோனா காலகட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும், ஈட்டிய விடுப்புக்கு பதில் ஊதியம் பெறும் உரிமையையும் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது அதைவிட பன்மடங்கு கூடுதல் வருமானம் வருகின்ற இந்த காலகட்டத்தில், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை கூட அளிக்க தயக்கம் காட்டுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தை கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுத்ததாக தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு திறமையற்ற அரசாக காணப்படுகிறது. உண்மை நிலை இப்படி இருக்க, அ.தி.மு.க. ஆட்சி மீது வீண் பழி போடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நிர்வாக திறமை

மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய வருவாய் மற்றும் நிவாரணத்தை பொறுத்தவரையில், தொடர்புடைய மத்திய மந்திரிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்துவதும், தேவையான அழுத்தத்தை கொடுப்பதும், தி.மு.க.வைச் சார்ந்த 34 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பி வற்புறுத்த சொல்வதும், அதன் வாயிலாக வருவாயை பெறுவதும்தான் நிர்வாகத்திறமைக்கு எடுத்துக்காட்டு. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தாமல் அ.தி.மு.க.வை குறை சொல்வது பொறுப்பை தட்டி கழிப்பதற்கு சமம்.

அ.தி.மு.க. அரசு 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்திருந்தால், திறமையோடு செயல்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிச்சயம் வழங்கியிருக்கும். அரசு ஊழியர்களின் நண்பன் யார்? என்பதை இனிமேலாவது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story