தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு...?


தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு...?
x

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெளிநாடுகளில் இருந்து வந்த 18,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்,  114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. 114 பேரில் 57 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்ததால் அவர்களின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், 33 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை மொத்தம் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 34 பேரில் வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் ஒமைக்ரான் உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். எல்லோரும் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். இவர்களுக்கு தலைவலி, தொண்டை வலி போன்ற லேசான அறிகுறிகள்தான் உள்ளது. இவர்களை ஏற்கனவே கண்காணிப்பில் வைத்து இருந்தோம். அதனால் அவர்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடிந்தது.

34 பேரில் 18 வயதுக்குள்பட்ட 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள். கொரோனாவை எதிர்த்து போராடியதுபோல் ஒமைக்ரானையும் எதிர்த்து போராடியே தீரவேண்டும். இந்த நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் தடுப்பூசிதான். எல்லோரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் தொற்றை தவிர்க்கலாம். 

அதேபோல் கட்டாயம் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் ஊரடங்கு வராது. மக்கள் கட்டுப்பாட்டால் ஒமைக்ரானையும் கட்டுப்படுத்தி விடலாம்

சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்புடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 24 பேருக்கு சோதனை முடிவு வரவேண்டியுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்” என்று அவர் கூறினார். 

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் (65), டெல்லிக்கு (64) அடுத்தபடியாக தமிழகம் (34 பேர்) மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Next Story