வழக்கமான 20 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன்: அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மெட்ரோ ரெயில் பயண அட்டை வினியோகம்


வழக்கமான 20 சதவீதம் கட்டண தள்ளுபடியுடன்: அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மெட்ரோ ரெயில் பயண அட்டை வினியோகம்
x
தினத்தந்தி 23 Dec 2021 6:22 PM GMT (Updated: 23 Dec 2021 6:22 PM GMT)

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கான பயண அட்டைகளை இனி அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டைகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதல் முகவராக வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரேம்நாத் என்பவருக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பயண அட்டையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி மெட்ரோ ரெயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு 5 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. பயண அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

முகவர்களுக்கான விண்ணப்பபடிவம் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், தேவைப்படும் பயண அட்டைக்கான இருப்புத்தொகையையும் செலுத்தி பயண அட்டையை அந்தந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க...

பயண அட்டையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன செல்போன் செயலி அல்லது ஏதேனும் ஒரு சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் உதவி எண் - 1860 425 1515, மின்னஞ்சல் customercare@cmrl.in மற்றும் செல்போன் எண் 94451-96185 இவைகளில் தொடர்பு கொள்ளலாம்.

பயண அட்டையை பெற உள்ளவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை அணுகலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story