சித்த மருத்துவ நிறுவனத்தின் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும் மத்திய மந்திரி தகவல்


சித்த மருத்துவ நிறுவனத்தின் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2021 12:18 AM IST (Updated: 24 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் சானடோரியத்தில் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி கூறினார்.

சென்னை,

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்தின் சார்பில் சித்த மருத்துவ தினம் மற்றும் சித்த மருத்துவ தேசிய மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் கே.கனகவல்லி வரவேற்றார். மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார்.

விரைவில் திறக்கப்படும்

அப்போது அவர், 'சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமையகம் ரூ.12 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அங்கு கட்டப்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடமும் விரைவில் திறந்து வைக்கப்படும்' என்றார்.

மத்திய ஆயுஷ் மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி முஞ்சாபரா மகேந்திர கலுபாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நோயாளிகளுக்கான சாப்ட்வேர்

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘கடந்த 6 ஆண்டுகளில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் 10-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது, புற நோயாளிகளுக்கான சாப்ட்வேரை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சித்த மருத்துவர்கள் உருவாக்கிய இந்த மென்பொருள் தற்போது இந்தியா முழுவதும் ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இயக்குனர் எஸ்.கணேஷ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பிரமோத்குமார் பதக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி நன்றி கூறினார்.

Next Story