புத்தொழில் ஆதார திட்டத்துக்கு தேர்வான 19 நிறுவனங்களுக்கு ரூ.95 லட்சம் முதற்கட்ட மானியம்


புத்தொழில் ஆதார திட்டத்துக்கு தேர்வான 19 நிறுவனங்களுக்கு ரூ.95 லட்சம் முதற்கட்ட மானியம்
x
தினத்தந்தி 24 Dec 2021 4:42 AM IST (Updated: 24 Dec 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

புத்தொழில் ஆதார மானிய திட்டத்துக்கு தேர்வான 19 நிறுவனங்களுக்கு முதற்கட்ட மானியமாக ரூ.95 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மூலங்களை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டை உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புத்தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர்விடமாகவும் உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டமாகும்.

ஆதார மானிய உதவி திட்டம்

புத்தொழில்களுக்கு உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) வழிவகுக்கிறது.

அதன் அடிப்படையில், புத்தொழில் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் “டான்சிம்” நிறுவனம் சார்பில் ஒரு முதன்மை முயற்சியாக, “டான்சீட்” எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புத்தொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூ.10 லட்சம் வரை ‘டான்சிம்’ நிறுவனம் வழங்குகிறது.

19 நிறுவனங்கள் தேர்வு

புத்தொழில் முனைவோருக்கான மானியம் வழங்கும் திட்டத்துக்கான நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 640 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு தீவிர தேர்வு செயல்முறையின் அடிப்படையில் உயர்மட்ட நிபுணர் குழுவால் 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 புத்தொழில் நிறுவனங்களுக்கு, மானியத் தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்கிடும் வகையில், முதல் தவணையாக தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.95 லட்சத்திற்கான காசோலைகளை, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், டான்சிம் இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிகத் துறை கூடுதல் இயக்குனர் ஆர்.ஏகாம்பரம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Story