குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை


குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2021 4:45 AM IST (Updated: 25 Dec 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்றங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, பி.டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா, மறைந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி, முதனை கோவிந்தன், சிதம்பரம் என்.பத்மினி ஆகியோர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ராசாக்கண்ணு மனைவி பார்வதிக்கு அவரது சொந்த ஊரில் வீடு கட்டி தருவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதை விரைவுபடுத்த வலியுறுத்தினோம்.

கருணை வேலை

தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். அலங்காநல்லூர், ஆம்பூரில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கான பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தினோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சிதம்பரம் பத்மினியின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

பாதுகாப்பு ஆணையம்

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் இருந்தாலும், அவரது செயல்பாடு போதுமானதாக இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக ஆணையத்துக்கு செயலாளர் நியமிக்கப்படவில்லை.

குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும். போக்சோ சட்டத்தை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி விரிவான தனி மனு அளித்துள்ளோம்.

கடன் தொல்லை

சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் குடியிருந்தவர்கள், மீண்டும் அந்த வீட்டில் குடியேற 1.5 லட்ச ரூபாய் பங்குத்தொகை செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, முந்தைய அ.தி.மு.க. அரசின் அரசாணையை மாற்றி, அந்த கட்டணத்தை குறைத்ததுடன், மாதம் ரூ.250 செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை-எளிய பெண்களுக்கு நுண்நிதி கடன் நிறுவனங்கள் தொல்லை தருகின்றன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

நாங்கள் அளித்த அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story