“கோவை மக்கள் குசும்பு மட்டும் இல்லை, ஏமாற்றவும் செய்து விடுகிறார்கள்” - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “எத்தனையோ முறை நான் கோவைக்கு வந்திருந்தாலும், இத்தனை எழுச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை. கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயமுத்தூருக்கு கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன்.
சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
கொரோனா தாக்குதல், அதிலும் கோவையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் கொரோனாவுடன் போராடினோம். 3ஆவது அலை வரும் என்கிறார்கள். எனினும் தமிழகத்தை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிலும் துணை முதல்-அமைச்சர் வரை என்னை கொண்டு போய்விட்டார்கள்.
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story