தமிழகத்தில் இன்று 17.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 9:43 PM IST (Updated: 26 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்,

சென்னை, 

ஓமைக்ரான் கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகம் முழுவதும் இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “ஜனவரி 3ம் தேதி போரூர் பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இன்று நடந்த 16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

அதில் 5,17,126 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12,14,151 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் மொத்தமாக- 17,31,277 லட்சம் நபர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் -85.76, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம்-57.94, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 92 லட்சமாக உள்ளது.

கொரோனாவால் இறந்த 375 முன்கள பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 93 கோடியே 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுவரை நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனசோர்வை போக்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 நபர்கள் ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20,934 பேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். 

Next Story