‘நீட்’ தேர்வு சிறப்பு பயிற்சியை உடனே தொடங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
‘மாணவ-மாணவிகளுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து ‘நீட்’ தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்’ என தமிழக அரசை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவிகள் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயா எனும் மாணவி ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அதேபோல தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த துளசி எனும் மாணவி 2020-ம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதி, டாக்டர் படிப்பிற்கு தேர்வாகாததால், இந்த ஆண்டு தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நுழைவுத் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்ததாகவும், ஆனால் மருத்துவப்படிப்பில் சேர இயலாத நிலையில் தனியார் பயிற்சி நிறுவனம் சான்றிதழ்களை தர மறுத்ததால் மன உளைச்சல் அடைந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த 2 சம்பவங்களையும் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாணவிகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன உறுதி வேண்டும்
மாணவ-மாணவிகள் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். உலகம் மிகவும் பெரியது. அன்பான தாயையோ. தந்தையையோ அல்லது இருவரையும் இழந்தவர்கள், பொருளாதார ரீதியில் துன்பப்படுபவர்கள் என்று பல்வேறு வகைகளில் தினசரி வாழ்வில் உங்களைவிட பலமடங்கு மிகவும் துன்பத்தை அனுபவிப்பவர்கள் மிகுந்த மன வலிமையுடன், தங்களுக்குள்ள குறைகளையே வெளியில் சொல்லாமல், வாழ்க்கை போராட்டத்தில் வெற்றிபெற்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை நீங்கள் முன் உதாரணமாக கொள்ள வேண்டும்.
அவர்களை பற்றிய வாழ்க்கை வரலாற்றை படித்து, நீங்கள் மனஉறுதி கொள்ள வேண்டும், அவர்களை போல் வாழ்வில் முன்னேற வேண்டும்.
சிறப்பு பயிற்சி
ஜெயலலிதாவின் அரசு, அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதன்படி மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை பேசியபோது, ‘இனி தனது குடும்பத்தினரை, தான் வசிக்கும் பகுதி மக்கள் இனி டாக்டர் குடும்பம் என்று பெருமையுடன் அழைப்பார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் பேசியதை நினைவுகூர கடமைப்பட்டு உள்ளேன்.
தி.மு.க. தேர்தலின்போதும், பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத்தேர்வை அரசியலாக்கியதே, மாணவ-மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணம். இனியாவது மாணவர்களிடம் உண்மையான நிலைமையை எடுத்துக்கூறி, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை, நீட் சிறப்பு பயிற்சியை உடனடியாக தொடங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
நிதியுதவி
மேலும் தஞ்சை மாணவி துளசியின் பள்ளி சான்றிதழை திரும்ப வழங்காத தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.
இந்த அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவ-மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று இந்த அரசை வற்புறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story