கோவை: குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வாகனம் அறிமுகம்
தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.
கோவை,
குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறை, அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்பு அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனம் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வாகனத்தின் 4 புறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை காணவும், அதனை பதிவு செய்யவும், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் இந்த வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வாகனம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி, சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும் அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாகனம் சென்னையிலிருந்து இன்று கோவைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த வாகனம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story