சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் ரூ.42 லட்சம் தங்கமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் ரூ.42 லட்சம் தங்கமும் சிக்கியது
x
தினத்தந்தி 28 Dec 2021 12:41 AM IST (Updated: 28 Dec 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் ரூ.42 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், சார்ஜா செல்ல வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர்.

அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, சூட்கேசில் துணிகளுக்கு நடுவில் கட்டுகட்டாக அமெரிக்க டாலரை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள டாலர்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து வாலிபரின் விமான பயணத்தை ரத்துசெய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரை கைது செய்து, அது யாருடையது பணம்?, ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜாவுக்கு வெளிநாட்டு பணம் கடத்தல் குறித்து பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்தான் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.42 லட்சம் தங்கம்

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை மற்றும் சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் சார்ஜ் செய்யும் வயர் பெட்டி இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, 10 சிறிய தங்க கட்டிகள் மற்றும் 3 தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.42 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 944 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story