குற்றால அருவிகளில் குளிக்க தடை: தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் குளுகுளு சீசன் நிலவும். அந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் சீசன் ரம்யமாக காணப்படும். இங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் குற்றாலம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் களை கட்டும்.
ஆனால், அருவிகளில் தண்ணீர் விழுந்தும் கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சபரிமலை பக்தர்கள், சுற்றுலாவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தநிலையில் டிசம்பர் 20ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குற்றால அருவியில் வரும் 31.12. 2021 முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றுருவி ஆகியவற்றில் வருகிற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story