கட்சியில் உழைக்கும் பெண்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி.


கட்சியில் உழைக்கும் பெண்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க வேண்டும்  - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 28 Dec 2021 2:03 PM IST (Updated: 28 Dec 2021 2:03 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் 500 மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் 500 மகளிர் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எம்.பூபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் தி.மு.க மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும்  மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூறியதாவது:-

“பெண்களுக்கான உரிமைகள் பெண்களுக்கான முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக முதல்வர் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதால் தற்பொழுது ஆண்கள் வீட்டில் இருந்து கொண்டு பெண்களை வேலைக்கு அனுப்புவதாகவும் அதனால் பெண்களின் சுதந்திரம் காக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பெண்கள் தற்போதைய ஆட்சியில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாகவும் கடந்த கால ஆட்சியில் புகார் அளிக்க பெண்கள் பயந்ததால் வழக்குகள் குறைவாக  பதிவாகியது என கூறினார். மேலும் கட்சியில் உழைக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட  வாய்ப்பளிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் குமாரி விஜயகுமார், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், மாநில தொண்டரணி துணை செயலாளர் நாகலிங்கம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கோவிந்தம்மா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் வேளாங்கண்ணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திராவிட பக்தன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story