மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Dec 2021 10:06 PM GMT (Updated: 28 Dec 2021 10:06 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையொட்டி மீனவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பல்படையில் நவீக் (பொது) மற்றும் மாலுமிகள் பணியிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பை அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, மீனவர்களின் வாரிசுகளுக்கு 3 மாதங்கள் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இந்த பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. ஜனவரி மாதம் பிற்பகுதியில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, தங்கும் இடம் இலவசம். தகுதியுள்ள மீனவர்களின் வாரிசுகள் இதுதொடர்பாக விண்ணப்பிக்கலாம். பயிற்சிகால ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பயிற்சி கையேடு இலவசமாக கொடுக்கப்படும். கடலோர மாவட்டங்களில் இருந்து மீனவர்களின் வாரிசுகள் இந்த பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப மனுக்கள்

விண்ணப்ப மனுக்களை இலவசமாக, கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலும், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்களின் அலுவலகங்களிலும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடைகளில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

பிளஸ்-2 தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடல் தகுதி உள்ள மீனவர்களின் வாரிசுகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story