ராஜேந்திர பாலாஜியின் ஊழல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும்..!! - அமைச்சர் சா.மு.நாசர்
ராஜேந்திர பாலாஜியின் ஊழல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
தேனி,
தேனியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே ரூ.83 கோடி சிக்கியது.
ஊழல் செய்துள்ள 10 அமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி பெயரும் உள்ளது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு போனார்.
ஐகோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. உடனே போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இன்று வரை அவர் தலைமறைவாகவே உள்ளார். 8 தனிப்படைகள் அவரை தேடி வருகிறது.
ஆவின் நிறுவனத்தில் ராஜேந்திர பாலாஜி செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. காத்திருங்கள், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும். சட்டம் தனது கடமையை செய்யும். யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, மு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். ஆனால் இன்று அவரால் தான் நடமாட முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story