புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கமிஷனர் தகவல்


புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2021 2:41 AM IST (Updated: 30 Dec 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.5½ கோடி மதிப்புள்ள பொருட்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளன. 302 பவுன் தங்க நகைகள், 1463 செல்போன்கள், 183 மோட்டார் சைக்கிள்கள், 46 கார்கள், 12 ஆட்டோக்கள் மீட்கப்பட்ட பொருட்களில் அடங்கும். மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் பெரிய விழாபோல நேற்று நடந்தது.

மீட்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கலந்து கொண்டு மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் நேரில் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

10 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மெரினா மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடலோர சாலைகளில் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை முழுவதும் சாலைகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பார்கள். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தடை இல்லை. ஆனால் குடிபோதையில் வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள். 2 ‘ஷிப்டு’களாக பிரிந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வழிபாட்டுத்தலங்களுக்கு செல்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். விபத்து இல்லாத, பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டமாக அமைய உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குபவர்களை உடனுக்குடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 சைபர் போலீஸ் நிலையங்கள்

சென்னையில் புதிதாக இணை கமிஷனர் சரகத்தில் 4 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 64 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் (ஜனவரி) முதல் இவை செயல்படும். ஏற்கனவே துணை கமிஷனர் சரகங்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சைபர் கிரைம் பிரிவு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story