புத்தாண்டை முன்னிட்டு கோவை மாநகரில் 1,050 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டையொட்டி கோவை மாநகரில் 1,050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கோவை,
புத்தாண்டை முன்னிட்டு கோவை மாநகரில் 4 போலீஸ் துணை கமிஷனர்கள், 13 உதவி கமிஷனர்கள் உள்பட 1,050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பொதுமக்கள் அனைவரும் 2022-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர். அதேநேரத்தில் தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்தப்படி கோவை மாநகரில் கலாச்சார மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள், 13 முக்கிய சந்திப்புகள், 66 வழிபாட்டு தலங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவினாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, டி.பி.ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, பூமார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீரமைக்கப்படும்.
கோவை மாநகர் எல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதோடு, வெளியூர்களை சேர்ந்த நபர்களும் கண்காணிக்கப்படுவார்கள். மேலும் முக்கிய இடங்களில் 67 வாகனங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை மாநகரில் 45 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப முக்கிய இடங்களில் 4 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும். புத்தாண்டையொட்டி 4 துணை கமிஷனர்கள், 13 உதவி கமிஷனர்கள், 38 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,050 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஏதாவது அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் அது குறித்து மாநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0422-2300970, செல்போன் எண் 9498181213, வாட்ஸ் அப் எண்-8190000100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story