திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்


திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:24 PM GMT (Updated: 4 Jan 2022 10:24 PM GMT)

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்றும், அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம் அப்புறப்படுத்தி, ‘தலைவர்கள் பூங்கா' என்ற ஒரு பூங்காவை உருவாக்கி அவற்றை அங்கு வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த திருமுருக தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

அதில், திருப்பூர் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் தி.மு.க.வின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் சிலை யை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்று கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரணைக்கு எடுத்தார். ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் கருணாநிதி சிலையை வைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதா? அதற்கு அனுமதி எதுவும் வழங்கப்பட்டுள்ளதா? என்று தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

நிராகரிப்பு

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி கோரி திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. க.செல்வராஜ் அளித்த விண்ணப்பத்தை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி கடந்த செப்டம்பர் 15-ந் தேதியே மாவட்ட கலெக்டர் நிராகரித்துவிட்டார் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரின் கடிதமும் தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என கூறி வழக்கை முடித்துவைத்தார்.

Next Story