சிறுவாணி அணை: நீர் சேமிப்பை பராமரிக்க கோரி கேரள முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Feb 2022 4:57 PM IST (Updated: 1 Feb 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க கோரி, கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, 

சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க கோரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடநடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வருக்கு கடிதம். 

சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின்மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் சேமிப்பை பராமரிக்கவும், சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

சிறுவாணி அணையிலிருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, ஆயிலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கேரள அரசு 0.484 டி.எம்.சி.-யிலிருந்து 1.128 டி.எம்.சி அளவிற்குத்தான் தண்ணீரை வழங்கியுள்ளது என்று புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலமுறை தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், கேரள நீர்ப்பாசனத் துறை, 878.50 மீட்டர் அளவிற்கு, அதாவது முழு நீர்த்தேக்க மட்டம் வரை, சிறுவாணி அணையின் நீர் இருப்பின் மட்டத்தைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முழு கொள்ளளவிற்கு நீரைச் சேமித்து வைக்காவிட்டால், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அடுத்த கோடைகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டத்தின் பிற பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் எதிர்காலத்தில் 878.50 மீட்டர் வரை, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை பராமரிக்கவும், மேலும் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்மந்திரி அவர்களை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story