“வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த, மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!


“வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த, மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
x
தினத்தந்தி 1 Feb 2022 8:00 PM IST (Updated: 1 Feb 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒன்றிய நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் இல்லை. 

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு என மாநில அரசு உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

கோதாவரி - பெண்ணாறு - காவிரி நதி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாதது கவலை அளிக்கிறது.மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடு இல்லை.

கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் மாநில அரசுகளுக்கான நிதிபற்றாக்குறை விளிம்பு 4 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு குறைந்தபட்சம் 5% நிதி பற்றாக்குறை வரம்பை நிபந்தனையின்றி  அனுமதித்திருக்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கையில் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணமா?

இதனை ‘மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை’ என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இது உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story