கால்வாய்க்குள் புதைத்து வைத்த 7 சாமி சிலைகள் மீட்பு 2 போலீசார் உள்பட 4 பேர் அதிரடி கைது


கால்வாய்க்குள் புதைத்து வைத்த 7 சாமி சிலைகள் மீட்பு 2 போலீசார் உள்பட 4 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 3 Feb 2022 5:42 AM IST (Updated: 3 Feb 2022 5:42 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 7 சாமி சிலைகள் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 போலீசார் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் (வயது 54). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார். தற்போது இவர் கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவர் விலை உயர்ந்த தொன்மையான ஐம்பொன் சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய விலை பேசி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரையில் இவர் பதுங்கி இருப்பதாகவும் தெரிய வந்தது.

அவரை உடனடியாக மடக்கிப்பிடித்து விசாரணை நடத்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவிட்டார்.

ஐ.ஜி.தினகரன் மேற்பார்வையில், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, சத்தியபிரியா, கவிதா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டனர். அலெக்சாண்டரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

2 போலீசார் கைது

அவரிடம் விசாரணை நடத்திய போது, திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அருப்புக்கோட்டையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் இளங்குமரன் (44) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொன்மையான 7 சாமி சிலைகளை கொடுத்து அவற்றை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்து தருமாறு கூறினார்கள் என்றும், அந்த சிலைகளை ராமநாதபுரம் மாவட்டம், கூரிசேத்தனார் அய்யனார் கோவில் பின்புறம் உள்ள கால்வாய்க்குள் புதைத்து வைத்து, விலை பேசி வந்ததாகவும் குறிப்பிட்டார்.

உடனடியாக போலீஸ் ஏட்டு இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவல் மேலும் திடுக்கிட வைத்தது.

போலீஸ் ஏட்டு இளங்குமரன் தனக்கு தெரிந்த விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் நாகநரேந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சொன்னார். அதன் பேரில் போலீஸ்காரர் நாகநரேந்திரன் கைதானார். கணேசன் போலீசார் கையில் சிக்கவில்லை.

சிலைகள் கிடைத்தது எப்படி?

கைதான 4 பேர் மற்றும் கணேசன் ஆகியோருக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. சேலம் எடப்பாடி அருகே உள்ள மலை கிராமம் ஒன்றில் 7 சாமி சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது என்றும் தெரிய வந்தது.

அதன்பேரில் இவர்கள் 5 பேரும் குறிப்பிட்ட கிராமத்திற்கு சென்று ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 தொன்மையான சாமி சிலைகளை கைப்பற்றுகிறார்கள். அங்குள்ளவர்களிடம், தங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி உள்ளனர். பின்னர் அந்த சிலைகளை விற்பனை செய்ய அவர்கள் புதைத்து பதுக்கி வைத்துள்ளனர்.

அந்த 7 சிலைகளையும், புதைக்கப்பட்ட கால்வாயில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று தோண்டி எடுத்து மீட்டனர். இந்த சிலைகள் எந்த கோவிலில், யாரால் திருடப்பட்டது, மலை கிராமத்திற்கு எடுத்து சென்று வீட்டில் மறைத்து வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான 2 போலீசார் உள்பட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மீட்கப்பட்ட சாமி சிலைகள் கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். கணேசன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை இந்த வழக்கில் தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

7 சிலைகள் விவரம்

2 அடி உயரம் உள்ள பெரிய நடராஜர் சிலை, 1½ அடி உயரம் உள்ள சிறிய நடராஜர் சிலை, 1½ அடி உயரம் உள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரம் உள்ள காளிசிலை, முக்கால் அடி உயரம் உள்ள முருகன் சிலை, அரை அடி உயரம் கொண்ட விநாயகர்சிலை, அரை அடி உயரமுள்ள நாகதேவதை சிலை போன்றவை மீட்கப்பட்டு உள்ளன.

Next Story