தமிழ்நாடு முழுவதும் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம் ஐகோர்ட்டில் அரசு தகவல்


தமிழ்நாடு முழுவதும் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2022 12:12 AM IST (Updated: 4 Feb 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

பொது இடங்களில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அனுமதியின்றி வைக்கப்படும் சட்டவிரோத பேனர்களை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

10 ஆயிரம் வழக்குகள்

அப்போது, தமிழக உள்துறை செயலாளர் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் தாக்கல் செய்த பதில் மனுவில், 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தது தொடர்பாக 10 ஆயிரத்து 926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேனர்கள் அமைப்பதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று டி.ஜி.பி., நகராட்சி நிர்வாக இயக்குனர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர்கள், பேரூராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்று கூறியிருந்தார்.

செலவு வசூலிப்பு

மேலும் அதில், ‘‘2021-ம் அக்டோபர் முதல் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை 4 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1,465 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன’’ என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story