ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு


ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
x
தினத்தந்தி 4 Feb 2022 5:30 AM IST (Updated: 4 Feb 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் மாநில உரிமைகளை காப்பாற்றுவதில் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களால் (பா.ஜ.க.) தமிழக மக்களை ஒரு போதும் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று பேசினார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் நன்றி

இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை, இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்று தான் பெரியாரும் அண்ணாவும், கருணாநிதியும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும். ராகுல்காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நேற்று தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றியதற்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று, ராகுல் காந்தியின் உரையை பாராட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவினை மேற்கோளிட்டு, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களும் நமது நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் எனது சகோதர சகோதரிகளே. உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நாம் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு கொள்கைகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்து உள்ளார்.

ஆட்டுக்குத் தாடி

இதே போன்று, மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு சமூக வலைத்தள பதிவில், ‘‘பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?' என்று அண்ணா அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்’’ என்று தெரிவித்து உள்ளார்.

Next Story