நீட் தேர்வு விவகாரம்: அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - ஓ.பி.எஸ். அறிக்கை


நீட் தேர்வு விவகாரம்: அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் - ஓ.பி.எஸ். அறிக்கை
x
தினத்தந்தி 5 Feb 2022 1:20 PM IST (Updated: 5 Feb 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு ரத்து தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் விலக்கு சட்ட முன்வடிவை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;-

“மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர், தமிழ் நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

நீட் தேர்வு ரத்து குறித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. 

அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story