‘‘தி.மு.க. அரசு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ மு.க.ஸ்டாலின் உறுதி


‘‘தி.மு.க. அரசு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 8 Feb 2022 5:32 AM IST (Updated: 8 Feb 2022 5:32 AM IST)
t-max-icont-min-icon

‘‘தி.மு.க. அரசு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்’’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாபெரும் வெற்றி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும்தான் மாபெரும் வெற்றியைப் பெறப்போகிறார்கள். அதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் கட்சித் தலைவர் என்கிற முறையில் எனது பரப்புரையை நேற்று முதல் நான் தொடங்கி இருக்கிறேன். வருகிற 17-ந்தேதி வரையிலும் எனது பரப்புரை பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

எல்லா இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நமக்கான செல்வாக்கு என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிக அதிகளவு கூடி இருக்கிறது. நமக்கு வாக்களிக்க தவறியவர்கள் கூட, இப்போது நமக்காக வாக்களிக்கும் முடிவோடு அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

சேலம் வெற்றி முக்கியமானது

நம்மை கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, இப்போது தங்களது விமர்சனத்தை குறைத்துவிட்டார்கள். எனவேதான் நாம் முழுமையான வெற்றியைப் பெறுவோம் என்று சொன்னேன். இதில் சேலத்தின் வெற்றி செய்தி மிகமிக முக்கியமானது என்பதை முதலிலேயே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், இங்கு நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப்பெற இயலவில்லை. அதற்கான காரணங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கைநழுவிய வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் கைப்பற்றியாக வேண்டும். இந்த உறுதிமொழியை மாவட்ட செயலாளர்கள் - நம்முடைய நிர்வாகிகள் - கட்சி வேட்பாளர்கள் - கூட்டணிக்கட்சியைச் சார்ந்த தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறைசொல்ல என்ன அருகதை இருக்கிறது?

நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. - பொய்யான - கவர்ச்சியான வாக்குறுதிகளை தந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார். நாங்கள் கொடுத்த வாக்குறுதியில் 70 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்பது மக்களுக்கே தெரியும். சொன்னதோடு சேர்த்து சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கிறோம்.

அவர் எதை கவர்ச்சியான வாக்குறுதி என்கிறார்? எதைப் பொய்யான வாக்குறுதி என்கிறார்? அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அதில் உண்மைக் குற்றவாளி யார் என்றும் உண்மையான காரணம் யார் என்றும், கூலிப்படையை அமர்த்தியது யார் என்றும், ஏவியது யார் என்றும் கண்டுபிடித்தாரா? அதைக் கண்டுபிடிக்கத் துப்பு இல்லாதவர்களுக்கு தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

என்ன காரணம்?

தினசரி கொலை, கொள்ளை நடப்பதாக அவர் சொல்லி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகச் செயல்பட்ட கொடநாடு பங்களாவிலேயே கொலையும் நடந்தது. கொள்ளையும் நடந்தது. இது சம்பந்தமான வழக்குகளைப் பதிவு செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான்.

இதில் சம்பந்தப்பட்ட சிலர், அப்போது சொல்ல முடியாத சில தகவல்களை இப்போது சொல்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கிறோம் என்றதும், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். கவர்னரையும் போய்ப் பார்த்தார்கள். அதற்கும் என்ன காரணம் என எனக்கு தெரியாது.

உள்நோக்கம் இல்லை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அடையாளமாக இருந்த கொடநாடு வீட்டில் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது என்பதால் அதில் உள்ள மர்மங்களை தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அது பற்றி விசாரிப்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் நானே குறிப்பிட்டு பேசினேன். அதனால்தான் ஆட்சி அமைந்ததும் அது சம்பந்தமான விசாரணையை முடுக்கிவிட்டேன். இதில் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை.

தி.மு.க. அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று வாக்குறுதி அளித்த தலைவர் கருணாநிதியின் மகன் நான். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். அப்படி நாங்கள் நிறைவேற்றுவது எல்லாம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற்று பங்கெடுத்தாக வேண்டும்.

அதற்காகத்தான் வாக்குக்கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன். உதயசூரியன் - உங்களது இதய சூரியன் அதனை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கட்சிகளின் சின்னங்களையும் மறவாதீர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story