‘நீட்' தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் அரசு எடுக்கும் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்


‘நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் அரசு எடுக்கும் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்
x
தினத்தந்தி 9 Feb 2022 12:24 AM IST (Updated: 9 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்' தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

‘நீட்' தொடர்பாக தற்போது 2-வது முறையாக கொண்டுவந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரித்துள்ளது. இருந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற அமைச்சர்களும் வெளியில் பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் ‘நீட்' தேர்வு கொண்டுவரப்பட்டது என்ற தவறான செய்தியை, அவதூறான செய்தியை பேசி வருகின்ற காரணத்தினால், அதற்கு முழுமையாக விளக்கம் அளிக்கும் விதத்தில் எங்கள் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் பேசினார்.

முழுமையாக பேச அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.

சட்டரீதியாக போராட்டம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுதும் ‘நீட்' தேர்வை ரத்து செய்வதற்காக சட்டரீதியாக போராட்டம் நடத்தினார். அதே வழியில் அ.தி.மு.க. அரசும் ‘நீட்' தேர்வை ரத்து செய்வதற்கு கடுமையான முயற்சியை மேற்கொண்டோம். இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ‘நீட்' தேர்வை நடத்தவேண்டிய சூழ்நிலை அ.தி.மு.க.வுக்கு இருந்த நிலையில், ‘நீட்' தேர்வு நடத்தப்பட்டது.

இப்போதும் தொடர்ந்து ‘நீட்' தேர்வு நடைபெற்றுகொண்டிருக்கிறது. அதோடு இன்றைக்கு ‘நீட்' தேர்வு வருவதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். 2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டு இந்த ‘நீட்' தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் காங்கிரஸ் மத்தியில் ஆண்டகாலம்.

இடைக்கால தீர்ப்பு

அதற்கு பிறகு 2013-ல் நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்கள் வழக்குபோட்டது. அப்போது இடைக்கால தீர்ப்பாக ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. அந்த தீர்ப்பிலே அந்தந்த மாநிலம் விருப்பப்பட்டால் ‘நீட்' தேர்வை அமல்படுத்திகொள்ளலாம். விருப்பம் இல்லாத மாநிலம் ‘நீட்' தேர்வை நடத்த தேவையில்லை என்ற ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதற்கு பிறகு 2013-ல் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 3 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் 2 நீதிபதிகள் ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். ‘நீட்' தேர்வினால் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் ‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை வழங்கினார்கள். இதனை முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்பொழுது குறிப்பிடவில்லை. ‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே தொடர்ந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

மறுசீராய்வு மனு

இவ்வளவு பிரச்சினைக்கு நாம் ஆளாகியிருக்க மாட்டோம். நமது மாணவ செல்வங்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை போட்டது. தி.மு.க. அப்போது கூட்டணியில் இருந்தது. இவர்கள் மறுசீராய்வு மனு போட்டதன் விளைவு 5 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு 2016 ‘நீட்' தேர்வு தீர்ப்பு வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

ஆழமான பிரச்சினை

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படிதான் ‘நீட்' தேர்வு இந்தியா முழுவதும் அமல்படுத்திய நிலையில் நீங்கள் உள்ளே பேசும்போது சரியான சட்டரீதியில் அணுக வேண்டும் என்று பேசினீர்கள். இப்போது கொண்டுவந்த தீர்மானத்தை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும். அவர் இசைவு தெரிவிக்கவேண்டும். இந்த நடைமுறை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?.

பதில்:- இது ஒரு ஆழமான பிரச்சினை. சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக செல்லவேண்டும் என்றால் சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசனை செய்து அதில் ஒரு தீர்வு கண்டு, இந்த சட்ட மசோதா ஒருமனதான நிறைவேற்றப்பட்டதற்கு வலுசேர்க்கும் வகையில் அனுப்பிவைத்து நடவடிக்கை மேற்கொண்டால் அ.தி.மு.க. துணை நிற்கும் என்ற செய்தியை தெரிவித்துள்ளோம். ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் இதே கருத்தை தெரிவித்தார். சட்டரீதியாக இதனை அணுக வேண்டும். சட்டரீதியாக அணுகுவதற்கு அ.தி.மு.க. துணை நிற்கும்.

அ.தி.மு.க. துணை நிற்கும்

கேள்வி:- இந்த விவகாரத்தில் அரசு கவனமாக உள்ளதா?.

பதில்:- இதில் கவனமாக இருக்கவேண்டும் என்றுதான் நாங்கள் குறிப்பிடுகிறோம். இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை. மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே இதில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ‘நீட்' தேர்வை தமிழகத்திற்கு ரத்து செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசு எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைக்கு துணை நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story