தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2022 4:36 AM IST (Updated: 10 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 4-ம் கட்ட குருதிசார் ஆய்வில், 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் கொரோனா புறநோயாளிகள் பிரிவு, ஆஸ்பத்திரி கட்டமைப்பு மற்றும் வசதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து 4-ம் கட்ட குருதிசார் ஆய்வு முடிவை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 1 கோடியே 10 லட்சத்து 21 ஆயிரத்து 196 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களை இலக்கு வைத்துதான் வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 99 ஆயிரத்து 408 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

87 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி

அதேபோல 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 26 லட்சத்து 92 ஆயிரத்து 917 பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 7 லட்சத்து 40 ஆயிரத்து 383 சிறுவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 368 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வின் (சீரோ சர்வே) 4-ம் கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான முதல் கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான 3-ம் கட்ட ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது. அந்தவகையில் 4-ம் கட்ட ஆய்வில் 10 வயதுக்கு மேற்பட்ட 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 1,706 பேர் அடங்கிய 30 குழுக்கள் மூலம், 32 ஆயிரத்து 245 கிராம மற்றும் நகர்புற மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகள் ஆகும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு 90 சதவீதம்

இதில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69 சதவீதமாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா 91 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

அதேபோல், கடலூர், நாகை மாவட்டங்களில் தலா 90 சதவீதம் பேருக்கும், நெல்லை, நாமக்கல், சென்னை, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 88 சதவீதம் பேருக்கும், நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில் தலா 87 சதவீதம் பேருக்கும், தேனி, திருச்சி, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 86 சதவீதம் பேருக்கும், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 85 சதவீதம் பேருக்கும், தர்மபுரி, காஞ்சீபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் முறையே 84, 83, 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

தமிழக அரசின் நீட் மசோதாவை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story