சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.
அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.
அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் (கொலீஜியம்) கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி மற்றும் கடந்த ஐனவரி 29-ந்தேதி நடைபெற்றது. அப்போது இந்த முடிவை கொலீஜியம் எடுத்துள்ளனர். பின்னர், இதுதொடர்பான பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று பொறுப்பு நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், 1960-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி பிறந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, அம்மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக 2007-ம் ஆண்டு பதவி ஏற்றார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். தற்போது அவர் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story