ஈமுக்கோழி பண்ணை நடத்தி ரூ.3¾ கோடி மோசடி செய்த வழக்கு: தம்பதிக்கு 10 ஆண்டு சிறை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2022 6:22 PM IST (Updated: 11 Feb 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

ஈமுக்கோழி பண்ணை நடத்தி ரூ.3¾ கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முனியன் என்கிற பாண்டியன் என்கிற முருகவேல் (வயது 47). இவருடைய மனைவி மாரியம்மாள் என்கிற லதா (45). இவர்கள் இருவரும் ஈரோட்டில் ஸ்ரீநித்யா ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமுகோழி பண்ணை நிறுவனமும், ஸ்ரீநித்யா பவுல்டரி என்ற பெயரில் நாட்டுக்கோழிப்பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் குணா, ராசு, சுரேஷ், கணேசன், கார்த்தி, மணிவண்ணன், விவேக்பாலாஜி, பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றினர்.

இந்தநிலையில் முனியன் மற்றும் அவருடைய மனைவி லதா ஆகியோர் தங்களுடைய நிறுவனத்தில் 2 விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தினர். அதில் முதல் பண்ணை திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ஒரு செட் அமைத்துக்கொடுத்தும், 4 ஈமுக்கோழிகள் கொடுத்து அதற்கு தேவையான தீவணங்கள், மருந்துகள் வழங்கி மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், ஆண்டு முடிவில் ரூ.20 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறி உள்ளனர். மேலும் திட்டம் 2-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நிறுவனமே 4 ஈமுக்கோழிகளை பராமரித்துக்கொண்டு, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.11 ஆயிரம் கொடுப்பதாகவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாகவும் கூறி இருந்தனர். அத்துடன் 3 ஆண்டுகளில் ஒப்பந்த காலம் முடிவில் முதலீட்டு பணத்தை தருவதாகவும் கூறினர்.

இதை நம்பி 244 முதலீட்டாளர்கள் ரூ.3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியதுபோன்று பணத்தை பெற்றுக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்களம் அருகே ரெட்டியார் தோட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து முனியன் மற்றும் அவருடைய மனைவி லதா, ஊழியர்கள் குணா, ராசு, சுரேஷ், கணேசன், கார்த்தி, மணிவண்ணன், விவேக்பாலாஜி, பிரபாகரன், ரமேஷ் ஆகிய 11 பேரை கைதுசெய்தார்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 279 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் முனியன் மற்றும் அவருடைய மனைவி லதா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

மேலும் இருவருக்கும் சேர்த்து 2 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராதம் தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதவிர இந்த வழக்கில் பண்ணை நிறுவனத்தில் பணியாற்றிய குணா, ராசு, சுரேஷ், கணேசன், கார்த்தி, மணிவண்ணன், விவேக்பாலாஜி, பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையே லதா நேற்று கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story