“வாக்கு எண்ணும் மையம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும” - ஐகோர்ட்டு கருத்து


“வாக்கு எண்ணும் மையம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும” - ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 16 Feb 2022 2:07 PM IST (Updated: 16 Feb 2022 2:07 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை மையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர் நகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை வாலாஜாபேட்டையில் இருந்து சோழிங்கருக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி, அமமுக வேட்பாளர் சீனிவாசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், சோழிங்கர் நகராட்சியில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் வாலாஜாபேட்டை வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகராட்சியில் 66 பெண்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை அணுகுவது சிரமமாக இருக்கும். எனவே வாக்கு எண்ணும் மையத்தை சோழிங்கர் நகராட்சிக்கு மாற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையத்தை எங்கு அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய முடியுமே தவிர, மனுதாரரோ, நீதிமன்றமோ தீர்மானிக்க முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் ஏற்கனவே வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

Next Story