வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்க தி.மு.க.வினரை அனுமதிக்கக்கூடாது: ஜெயக்குமார்


வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்க தி.மு.க.வினரை அனுமதிக்கக்கூடாது: ஜெயக்குமார்
x
தினத்தந்தி 18 Feb 2022 4:04 AM IST (Updated: 18 Feb 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்க தி.மு.க.வினரை அனுமதிக்கக்கூடாது, என்று மாநகராட்சி கமிஷனரிடம் பேசி உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனருடன் சந்திப்பு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீஸ் கமிஷனரை சந்தித்து 2 முக்கியமான கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன். சென்னையில் ரவுடிகளை ஏவிவிட்டு, கலவரத்தை உண்டாக்கி, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சியான தி.மு.க. திட்டமிட்டு உள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்றும், எனவே பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், என்றும் கேட்டுள்ளோம்.

தி.மு.க.வினரை அனுமதிக்கக்கூடாது

வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’புகளை வழங்க தி.மு.க.வினரை அனுமதிக்கக்கூடாது என்று மாநகராட்சி கமிஷனருடன் பேசி கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் அதுபோல் நடக்காது என்று உறுதி அளித்துள்ளார். அதை மீறி நடந்தால், எங்கள் கட்சியினர் செல்போனில் படம் பிடிப்பார்கள். உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு செல்வோம்.

‘பூத் சிலிப்’புகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும்.

‘ரோபோ’ போல செயல்பாடு

தமிழகம் முழுவதும் ஆள் கடத்தல், வேட்பாளர்களை மிரட்டுதல், வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்தல் போன்ற அராஜக செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாநில தேர்தல் ஆணையம் ‘ரோபோ’ போல செயல்படுகிறது. அதன் ‘ரிமோட்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. அவர் சொல்வது போல்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

வெற்றி நிச்சயம்

தி.மு.க.வினர் செய்யும் அத்தனை அராஜக செயல்களையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.முக. ஓட்டுகள் பா.ஜ.க.விற்கு விழும் என்பது தவறானது.

அ.தி.மு.க. ஓட்டுகள் வேறு எந்த கட்சிக்கும் விழாது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை தேடி தருவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story