ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியதை ஓ.பன்னீர்செல்வம் மறைக்க முயற்சிப்பது வேதனை: அமைச்சர் ஐ.பெரியசாமி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சட்டமன்றத்தில் பேசியதை ஓ.பன்னீர்செல்வம் மறைக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறி உள்ளார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“ஜல்லிக்கட்டு குறித்து விஷமப் பிரசாரம் செய்வதா” என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர், அதுவும் அ.தி.மு.க. ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு வந்தவர், மு.க.ஸ்டாலின். மெரினா போராட்டமாக இருந்தாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றாலும், அன்று போராடிய இளைஞர்களோடு தோளோடு தோள் நின்றவர். தொடக்கம் முதலே போராடிய இளைஞர்கள் பக்கம் நின்று, சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதாவை ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றி கொடுத்தவர்தான், மு.க.ஸ்டாலின் என்பதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் மறந்துவிட்டுப் பேசுகிறார்.
அரசியல் நாகரிகமா?
சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அ.தி.மு.க. அரசின் அராஜகத்தைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றியதற்கு 27.1.2017 அன்று ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டுமென கோரி வந்தவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்றும், ஒசாமா பின்லேடன் படம் வைத்திருந்தார்கள் என்றும், இந்திய குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம் என்ற பதாகைகள் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் சட்டமன்றத்தில் பேசினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட தீய சக்திகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உரையாற்றி, அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசேகரன் தலைமையில் அமைத்தது இதே ஓ.பன்னீர்செல்வம்தான். சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும், உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலினை கண்டனம் செய்வதுதான் அரசியல் நாகரிகமா?
சட்டமன்ற பதிலுரை
மு.க.ஸ்டாலின், மிகத் தெளிவாக, அடுத்த முறை சட்டமன்றத்துக்கு வரும் போது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்திப் பேசியதை படித்துப் பாருங்கள் என்றுதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொல்லியிருந்தார். அதைக்கூட புரிந்து கொள்ளாமல், மதுரையில் தன் வேடத்தை கலைத்து விட்டாரே, இளைஞர்களின் சாதனையை தன் சாதனை போல் இத்தனை காலமும் பேசி வந்ததை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில், எரிச்சலில் மு.க.ஸ்டாலின் மீது பாய்ந்து கண்டன அறிக்கை வெளியிடுவதில் அர்த்தமில்லை.
எனவே ஓ.பன்னீர்செல்வம் அன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து அவர்கள் சொன்னதைக் கேட்டு ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள், களங்கப்படுத்தினீர்கள் என்பதை மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல் ஆற அமர்ந்து ஒருமுறை உங்களது சட்டமன்ற பதிலுரையை படித்துப் பாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story