மத்திய அரசு இலங்கை அரசுடன் உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வங்க கடலில் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை. இவற்றுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் 6 மீனவர்களை கைது செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும், அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன், இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மீனவர் சிக்கலுக்கு தீர்வுகாண இரு தரப்பு மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்குவது என சமீபத்தில் நடந்த இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story