தி.மு.க.வினரின் தில்லு முல்லுகளை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்- அ.தி.மு.க. முகவர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்
வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரின் தில்லு முல்லுகளை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அ.தி.மு.க. முகவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னை,
இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19-ந் தேதி(நேற்று) முடிந்துள்ள நிலையில், 22-ந் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அ.தி.மு.க. சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கட்சிக்கு சமர்ப்பிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பே சென்றுவிட வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி உள்ளனவா? என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குப் பதிவு எந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா? என்பதை உறுதி செய்திட வேண்டும்.
* பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளதா? என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடித்து அறிவித்த பிறகு தான், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
* மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், அந்த வார்டின் முடிவை வெளியிட்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கிய பிறகு தான், அடுத்த வார்டின் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
*வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா? என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீர்வினைக் காண வேண்டும்.
* வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.-வினரால் தில்லுமுல்லுகள் ஏதேனும் நடத்தப்படுகிறதா? என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.
விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்
*அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்களும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா? என்பதை விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட கலெக்டர்/மாவட்ட தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பில் சீலிடப்பட்டு வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story