வருகிற 26-ந் தேதி தமிழகத்தில் 23-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


வருகிற 26-ந் தேதி தமிழகத்தில் 23-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2022 3:17 AM IST (Updated: 22 Feb 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் 3-ம் பாலினத்தவர்கள் நடத்தும் சிற்றுண்டி உணவகத்தை நேற்று (திங்கட்கிழமை) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இருக்கிற 3-ம் பாலினத்தவர் அனைவரும் ஓட்டல் போன்ற புதிய உத்திகளுடன்கூடிய தொழில் முனைவோராக ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதேப்போல் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது. மிக விரைவில் இந்த எண்ணிக்கையை பூஜ்ஜியத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 92 சதவிகிதத்தை எதிர்கொண்டு வருகிறது. 2-வது தவணை தடுப்பூசியை 72 சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 ‘டோஸ்‘ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (26-ந் தேதி) 23-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

சி.எஸ்.ஆர்.நிதி

தினந்தோறும் தடுப்பூசிகள் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவதற்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். பேரிடர் காலத்தில் தடுப்பூசி ஒன்றுதான் நோயில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு உதவும்.

தனியார் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.நிதி பங்களிப்புடன் பல லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பல வகைகளில் உதவியாக இருந்தார்கள். அதுபோல் தற்போதும் தடுப்பூசிகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் நிலுவையில் இருப்பதால், இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story