‘திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


‘திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 23 Feb 2022 5:33 AM IST (Updated: 23 Feb 2022 5:33 AM IST)
t-max-icont-min-icon

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியதுடன், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டது. முதலிலேயே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் குவிந்து வெற்றியை கொண்டாட தொடங்கினர். மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை ஆனந்தமாக கொண்டாடினர்.

இந்தநிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘வாழ்க வாழ்க வாழ்கவே... தி.மு.க. வாழ்கவே...’ என்று உற்சாக கோஷம் எழுப்பினர்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் தேர்தல் வெற்றியையொட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘திராவிட மாடல்’ ஆட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. இந்த தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைத்தேன். ‘எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள். அப்படி தரும் விதத்தில் உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறோம்’, என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அந்த முழு வெற்றியை மக்கள் இன்றைக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்றுதான் இந்த மாபெரும் வெற்றி. என்னை பொறுத்தவரை, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கக்கூடிய அங்கீகாரம். தி.மு.க. ஆட்சி அமைந்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உண்டு. அந்த நம்பிக்கையைதான் இந்த 9 மாத காலத்தில் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பேராசையாக நினைக்க கூடாது

மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை எப்பொழுதும் நாங்கள் காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களையும், வரலாற்றில் இடம் பெறும் சாதனைகளையும் செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் செய்ய போகிறோம். இது தமிழக மக்களுக்கு 100 சதவீதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், உள்ளாட்சிகளிலும் 100 சதவீதம் நமது கூட்டணி இருக்க வேண்டும் என்ற அந்த விருப்பத்தைத்தான் பிரசாரத்தில் தொடர்ந்து சொல்லி வந்தேன்.

நான் மிகுந்த பேராசைப்படுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. மக்கள் அடைவது பேராசை அல்ல, உங்கள் உரிமைதான். தங்களது வாக்குகள் மூலமாக, தேர்தல் மூலமாக இதை நீங்கள் செய்து காட்டியிருக்கிறீர்கள். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற என்கிற உறுதிதான் எனக்கு வந்துள்ளது. அந்தவகையில் எனது பொறுப்புகளை உணர்ந்து, அவையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

சரிபாதி அளவில் பெண்கள்

இந்த வெற்றிக்கு முழு காரணம், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். இது தேர்தல் உறவாக மட்டுமல்ல, கொள்கை அளவில் உறவு உள்ள காரணத்தினாலேயே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், அதனைத்தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தல், தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்ற தேர்தல்களில் இந்த கூட்டணி அமைந்து, பல வெற்றிகளை நாம் கண்டுள்ளோம். அதேபோல கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும், பிரசாரமும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு தரப்பட்டிருக்கும் ஒதுக்கீடு முக்கியமானது. இந்த தேர்தலில் சமூகத்தின் சரிபாதி அளவில் பெண்கள் இத்தகைய பொறுப்புக்கு வந்துள்ளனர். இது மாபெரும் சமூகநீதி புரட்சியாகும். ‘திராவிட மாடல்' புரட்சியாகும். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் கட்சியின் லட்சியம், குறிக்கோள். தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கொங்கு மண்டலத்தில் வெற்றி

கேள்வி:- அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் பெருவாரியான இடங்களை தி.முக. கைப்பற்றியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அன்றைய தினம் இரவே நான் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றேன். அங்கு வாழ்த்துகளை பெற்றோம். உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போது பத்திரிகையாளர்களிடம், ‘‘இன்றைக்கு மக்கள் ஆட்சி பொறுப்பில் எங்களை அமரவைத்திருக்கிறார்கள். நாங்கள் வரவேண்டும் என்று எண்ணி எங்களுக்கு வாக்களித்த மக்கள் எங்களது பணியை பார்த்து மகிழ்ச்சி அடையவேண்டும். எங்களுக்கு வாக்களிக்க தவறியவர்கள், ‘இவர்களுக்கு போய் வாக்களிக்க தவறிவிட்டோமே...’, என்று வருத்தப்பட வேண்டும். அந்தளவு எங்கள் பணி இருக்கும்’’, என்று கூறினேன். அதை உறுதியாகவும் ஏற்றுக்கொண்டேன். அதைத்தான் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 9 மாத காலமாக செய்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றி. அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லிக்கொள்ளும் கொங்குமண்டலத்தையே இன்றைக்கு கைப்பற்றி இருக்கிறோம். இதுதான் உண்மை.

மக்களை சந்திப்பதில் ஆர்வம்

கேள்வி:- தேர்தலையொட்டி நீங்கள் நேரடியாக பிரசாரத்துக்கு செல்லாதது குறித்து பல விமர்சனங்கள் கூறப்பட்டதே...

பதில்:- மக்களை நேரடியாக சென்று சந்திப்பதில் என்னைவிட யாரும் அதிகமாக ஆர்வம் காட்டியிருக்க முடியாது. மேயராக இருந்தபோதும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்-அமைச்சராக இருந்தபோதும், ஏன் இப்போது முதல்-அமைச்சராக இருக்கும்போதும் மக்களை நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 2 பேர் ரோட்டில் நின்று கைகாட்டினால் கூட, காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சென்று பேசிவிட்டு தான் செல்கிறேன்.

கொரோனா நேரம் என்பதால் பல விதிமுறைகளை, கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் இந்த சூழலில் நான் நேரடியாக மக்களிடம் செல்லும்போது, அதற்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது. முதல்-அமைச்சர் வருகிறார் என்றால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும். வீணாக செலவு ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவேதான் காணொலி காட்சி மூலம் எல்லா மாவட்ட மக்களிடமும் பேசினேன். இப்போதும் சொல்கிறேன் மக்களை சந்திக்க நேரடியாக செல்ல எந்த நேரமும் நான் காத்திருக்கிறேன்.

மாநகராட்சி மேயர் பதவி

கேள்வி:- சென்னை மாநகராட்சி மேயர் பதவி பிரமாணம் ரிப்பன் மாளிகையில் நடைபெறும்போது நீங்கள் பங்கேற்பீர்களா?

பதில்:- இன்னும் தேர்தல் முடிவு முழுமையாக வரவில்லை. எனவே இந்த நடைமுறைகள் முடியட்டும். மேயர் பதவி பிரமாணம் குறித்து ஒவ்வொரு மாநகராட்சிகளில் தேதி குறிக்கப்படும். அந்த சூழலை பொறுத்து யார், யார் அதில் பங்கேற்பது’ என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கேள்வி:- தேர்தலில் பா.ஜ.க.வும் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறதே?

பதில்:- சில இடங்களில் கட்சியை மனதில் வைத்து ஓட்டு போடுவார்கள். சில இடங்களில் வேட்பாளரை மனதில் வைத்து வாக்களிப்பார்கள். எனவே முழுமையான தேர்தல் முடிவுகள் வரட்டும். அதன்பிறகு எனது கருத்தை சொல்கிறேன்.

மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Next Story