தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ஜாமின் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கைதாகி சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். 8 கிரவுண்டில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story