வணிகர் தின மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - விக்கிரமராஜா தகவல்


வணிகர் தின மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - விக்கிரமராஜா தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2022 12:16 AM IST (Updated: 26 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

39-வது வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் மே 5-ந்தேதி நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டல கூட்டம், சென்னை பாரிமுனையில் நடந்தது. மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமை தாங்கினர்.

பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்றார்.

கூட்ட முடிவில் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

39-வது வணிகர் தின மாநில மாநாடு வருகிற மே 5-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது வணிகர் நலன் சார்ந்த நிறைய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

வணிகர் நல வாரியம் உள்பட வணிகர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு விடை கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் வணிகர்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், உள்ளாட்சி, நகராட்சி, அறநிலையத்துறை வாடகை கடைகளில் நிலுவை வாடகைகளை தவணை முறைகளில் செலுத்த அனுமதி வேண்டும், தொழிலாளர் நலத்துறையில் தராசு முத்திரை ஆன்-லைன் பதிவுகளை உரிய அவகாசத்துடன் அமல்படுத்த வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story