அ.தி.மு.க. ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்


அ.தி.மு.க. ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்
x
தினத்தந்தி 26 Feb 2022 12:26 AM IST (Updated: 26 Feb 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

கடல் ஆற்றில் போய் கலக்காது என்றும், அ.தி.மு.க. ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்றுவிட்டு, அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அ.தி.மு.க. இருக்காது என்றும், அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

தி.மு.க. என்பது ஒரு குடும்பக்கட்சி. ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால், அ.தி.மு.க. என்பது மாபெரும் மக்கள் இயக்கம். கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

13 ஆண்டுகள் வனவாசம்

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போதும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை அமைத்த போதும், ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், ‘தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவருமான ‘நடமாடும் பல்கலைக்கழகம்' நாவலர் ரா.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, ப.குழந்தைவேலு ஆகியோர் உள்பட தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், கோடிக்கணக்கான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் ஐக்கியமானதையும், தி.மு.க. கூடாரமே காலியானதையும், அதற்கு பிறகு 13 ஆண்டுகள் தி.மு.க. வனவாசம் இருந்ததையும், கூட்டுறவுத்துறை அமைச்சர் மறந்துவிட்டார் போலும்.

அடுத்தபடியாக, சிறிய மாநகராட்சிகளையாவது அ.தி. மு.க. கைப்பற்றி இருக்க வேண்டாமா? என்ற ஆதங்கத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது தி.மு.க.ஆட்சிக் காலத்தில்தான். சென்னை ஐகோர்ட்டிடம் இருந்தே ‘நற்' சான்றிதழ் பெற்ற கட்சி தி.மு.க.

தி.மு.க.வில் சங்கமம் ஆகாது

தேர்தல் நடைபெற்ற விதம் அ.தி.மு.க.வினருக்கு நன்கு தெரியும் என்பதால் இதில் எங்கள் கட்சியினருக்கு எவ்விதமான ஆதங்கமும் இல்லை.

தற்போது மயக்கத்தில் இருக்கிறார் அமைச்சர். மயக்கத்தில் இருந்து அவர் விடுபட வேண்டும். ஜெயலலிதா குறிப்பிட்டது போல், அ.தி.மு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்பதையும், அ.தி.மு.க. ஒருநாளும் தி.மு.க.வில் சங்கமம் ஆகாது என்பதையும் கூட்டுறவுத்துறை அமைச்சருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story