உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2022 12:27 AM IST (Updated: 28 Feb 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டில் சிக்கிய இந்தியர்களை மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் உச்சத்தில் இருக்கின்ற இந்த தருணத்தில், ரஷிய நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியும், குண்டுமழை பொழிந்தும் வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள இந்திய மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாயகம் திரும்ப முடியாமல் கரங்கப்பாதைகளில் பதுங்கி உள்ளதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

உக்ரைன் நாட்டில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிப்பதாகவும், இவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாகியா ஆகியவற்றின் எல்லை பகுதிகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசு, உக்ரைன் நாட்டில் இருந்து அதன் அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்திய மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மீட்க நடவடிக்கை

பாதுகாப்பின்மை என்பது உக்ரைன் நாட்டில்தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டை விட்டு வெளியே வந்தபிறகு அவர்களது பாதுகாப்பு என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். எனவே உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களை அங்கிருந்து அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதும், அங்கிருக்கும் வரை அவர்களுக்கு உணவு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்வதும் இன்றியமையாதது. இதைத்தான் அங்குள்ள மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். அவர்களது பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே உக்ரைன் நாட்டில் உள்ள பஸ்கள் மூலமாகவோ அல்லது அதன் அண்டை நாடுகளில் உள்ள பஸ்கள் மூலமாகவோ உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்கள் உள்பட 16 ஆயிரம் இந்தியர்களை ஒரு சில நாட்களில் உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளின் ஒப்புதலோடு பாதுகாப்பாக சாலை மார்க்கமாக அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்கச் செய்யவும், பின் அங்கிருந்து அவர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வரவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உக்ரைனில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக விரைவில் இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டுவர பாடுபடும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மேலும் துரிதப்பட வேண்டும்.

உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் மூலம் வரும் கடைசி தமிழர் வரை அனைவரையும் உடனுக்குடன் சென்னைக்கு அழைத்து வந்து, அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story